ஹைதராபாத்:தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தெலங்கானாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இன்று (ஜூலை 10) உயர் அலுவலர்களுடன் மழை நிலவரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் சோமேஷ்குமார் மற்றும் பல்வேறு துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தினார். மேலும், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், நீர் நிலைகளை கண்காணிக்க வேண்டும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை தேவைப்பட்டால் சிறப்பு முகாம்களுக்கு மாற்ற தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சாலைகளில் மழை நீர் தேங்கினால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.