அமிர்தசரஸ்:2015ஆம் ஆண்டு ஆம் ஆத்மி அரசால் ‘மொஹல்லா கிளினிக்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கிளினிக்குகளில் இலவச மருத்துவம், மருந்துகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. கடந்தாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பஞ்சாப்பில் முதற்கட்டமாக 100 மொஹல்லா கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து நேற்று (ஜன.26) பதிண்டாவில் உள்ள ஷஹீடு பகத் சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நாட்டின் 74ஆவது குடியரசு தின விழாவில், பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர் பவந்த் மான் சிங், ‘ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், அமிர்தசரஸில் வைத்து மொஹல்லா கிளினிக்குகளை திறந்து வைக்க உள்ளார்.
மொஹல்லா கிளினிக்குகளுக்கு மக்களின் ஆதரவு பெருகி வருகிறது” என்றார். அதன்படி, இன்று (ஜன.27) அமிர்தசரஸில் உள்ள புட்லிகரில், 2ஆம் கட்டமாக 400 மொஹல்லா கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டன. ரூ.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒவ்வொரு மொஹல்லா கிளினிக்குகளும் கட்டமைக்கப்பட்டுள்ளன.