மண்டி:ஐஐடி மண்டி இயக்குநர் லக்ஷ்மிதர் பெஹரா மாணவர்கள் மத்தியில் உரையாற்றும்போது "இறைச்சி சாப்பிட வேண்டாம்" என்ற வார்த்தையைத் திரும்பத் திரும்ப மாணவர்களைச் சொல்ல வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அவரின் இந்த பேச்சுக்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கருத்துக்களையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியத் தொழில்நுட்பக் கழகம் மண்டி இயக்குநர் லக்ஷ்மிதர் பெஹெரா மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அவரின் அந்த உரை எப்போது நடைபெற்றது என்பது தெரியவில்லை. ஆனால் அந்த உரையாடலில் மாணவர்களிடம் "இறைச்சி சாப்பிட வேண்டாம்" என்ற வார்த்தையை அவர் திரும்பத் திரும்ப சொல்ல வைக்கிறார். மேலும், விலங்குகளை வெட்டி கொலை செய்வதால்தான் ஹிமாச்சலபிரதேசத்தில் இயற்கை பேரழிவுகள் ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அந்த வீடியோவில், மாணவர்கள் மத்தியில் அவர் பேசும்போது, அப்பாவி விலங்குகளை நீங்கள் வெட்டி உண்பதை நிறுத்தாவிட்டால் ஹிமாச்சலபிரதேசத்தில் பேரழிவுகள் ஏற்படும் என அவர் அந்த வீடியோவில் கூறுகிறார். மேலும், மாணவர்களிடம், "நீங்கள் நல்ல மனிதர்களாக மாற என்ன செய்ய வேண்டும்? இறைச்சி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்". இன்று முதல் இறைச்சி சாப்பிட மாட்டேன் எனச் சபதம் எடுங்கள் என அந்த வீடியோவில் வற்புறுத்துகிறார் பெஹெரா.
இதையும் படிங்க:உலகளாவிய தெற்கின் குரலை ஜி20 மாநாடு பிரதிபலிக்கும் - அமிதாப் காந்த்