ஹைதராபாத் நகரைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து கோவேக்சின் என்ற கரோனா தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளது.
பல்வேறு கட்ட சோதனைகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தத் தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் அடுத்த கரோனா தடுப்பூசியின் முதலாம், இரண்டாம் கட்ட பரிசோதனை அடுத்த மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய தடுப்பூசிக்கு இன்ட்ராநாசல் தடுப்பூசி எனப் பெயரிட்டுள்ளனர். இதற்காக, வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினுடன் ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளனர். இந்தத் தடுப்பூசி மூக்கில் விடப்படும் சொட்டுகளின் வடிவத்தில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்த “இந்தியாவிற்கும் பெல்ஜியத்திற்கும் இடையிலான உறவை ஏற்படுத்தல்” என்ற உயர்மட்ட ஆன்லைன் கருத்தரங்கில் டாக்டர் எலா பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், "மற்ற தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில் புதிய இன்ட்ரானாசல் தடுப்பூசி, புற்றுநோய் நோயாளிகள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு எவ்வாறு பாதுகாப்பானது என விவாதித்தார். மேலும், கரோனா தடுப்பூசியை இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தேவையான குளிரூட்டு வசதியுடன் கூடிய பாதுகாப்பான போக்குவரத்தில் சிக்கல் உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு தான், பெல்ஜியம் நாட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. ஹைதராபாத்திலிருந்து லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவுக்கு COVID-19 தடுப்பூசிகளை வழங்குவதில் பெல்ஜிய விமான போக்குவரத்து சேவை முக்கிய பங்கு வகிக்கும்" எனத் தெரிவித்தார்.