கயா: பீகார் மாநிலம், புத்த கயாவில், "புத்த மஹோத்சவம்" எனப்படும் புனித போதனை நிகழ்ச்சி இன்று(டிச.29) தொடங்கியுள்ளது. இதில், திபெத்திய புத்த மதகுருவான தலாய் லாமா கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். வரும் 31ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போதனை நிகழ்ச்சியில், 50 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தலாய் லாமா கடந்த 22ஆம் தேதி கயாவுக்கு வருகை தந்தார். அப்போது சீனப் பெண் ஒருவர், அவரை உளவு பார்ப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பீகார் காவல் துறையினர் அந்தப் பெண் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்தப் பெண்ணின் பெயர் ஷோங் ஜியோலன் என்றும், அவர் கடந்த ஓராண்டாக இந்தியாவில் தங்கி இருந்தார் என்றும் தெரியவந்தது. ஆனால், அவர் தங்கியிருப்பது குறித்து தூதரகத்தில் எந்தவித தரவுகளும் இல்லை.