பீஜிங் :இந்தியா - சீனா இடையிலான எல்லை பிரச்சினை நீண்ட நாட்களாக நீடித்து வருகிறது. அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளை தனக்கு சொந்தமானது என சீனா கூறி வருகிறது. மேலும் எல்லையில் அத்துமீறல்களில் ஈடுபடும் சீனா, சட்டவிரோத குடியிருப்பு, தொலைத் தொடர்பு டவர்கள் அமைப்பது, பாலம் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
அவ்வப்போது எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய வீரர்களை சீண்டியும், வம்புக்கிழுத்தும் பல்வேறு அடிகளை சந்தித்து வருகீறது. இந்நிலையில், புதிய பிரச்சினையாக அருணாசல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களுக்கு 3 வது முறையாக பெயர் சூட்டி சீனா வரைபடம் வெளியிட்டு உள்ளது.
சீனா அமைச்சகத்தின் அத்துமீறிய இந்த அறிவிப்பால் எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. அருணாசல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களுக்கு சீன, திபெத்திய, பின்யின் எழுத்துகளில் பெயர் சூட்டியும், சில பகுதிகளை தெற்கு திபெத் என பெயர் சூட்டியும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்.2) சீன அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
இந்த 11 இடங்களை உள்ளடக்கிய அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளை தெற்கு திபத்தில் இருப்பதாக வரை படம் வெளியிட்டு உள்ள சீன அரசின் உள்விவகாரத் துறை அமைச்சகம், அதை ஜங்கன் மற்றும் தெற்கு திபெத் என்றும் பெயர் சூட்டி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.