பெய்ஜிங்:இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசம் சீனாவின் எல்லைப் பகுதியில் உள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் எல்லை சீனாவின் எல்லையை ஒட்டியுள்ளது. இதனால், அருணாச்சலப்பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அப்பகுதிகளை "தெற்கு திபெத்" என்று சீனா கூறி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்சினை அதிகரித்து வருகிறது. இதனை சுமூகமாக தீர்ப்பதற்காக இருநாடுகளும் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், அவ்வப்போது எல்லைப் பகுதிகளில் சீனாவின் அத்துமீறலால் பதற்றங்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு இந்த எல்லைப் பதற்றங்கள் அதிகரித்துவிட்டன.
அருணாச்சலப் பிரதேசத்தை தங்களுடையது என அறிவுறுத்தும் வகையில் எல்லைப் பகுதிகளில் சீனா கட்டுமானங்களைக் கட்டி வருகிறது. எல்லைப் பகுதியில் சாலை, வீடுகள் போன்றவற்றை கட்டுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு இந்த கட்டுமானங்கள் தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், சர்ச்சைக்குரிய பகுதியில் ஒரு சிறிய கிராமத்தையே சீனா கட்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.