ஐநா : கடந்த 2008ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாக தேடப்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் பயங்கரவாதி சஜித் முர்ரை சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கக் கோரி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா மற்றும் அமெரிக்கா கொண்டு வந்த முன்மொழிவை சீனா தடுத்து நிறுத்தியது.
கடந்த 2008ஆம் ஆண்டு மும்பை நகருக்குள் புகுந்து பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் 10 பேர் பொதுமக்கள் மீதும், போலீசார் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த 6 பேர் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 170 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பின் பயங்கரவாதி சாஜித் மிர்ரை இந்தியா , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தேடப்படும் தீவிரவாதியாக அறிவித்தது.
இந்நிலையில், சஜித் மிர்ரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து கறுப்புப் பட்டியலில் சேர்த்து, அவரது சொத்துகளை முடக்கி, பயணத் தடை மற்றும் ஆயுதத் தடைக்கு உட்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முன்மொழிந்தன.
இந்நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி சஜித் மிர்ரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முன்மொழிவை சீனா தடுத்து நிறுத்தியது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சஜித் மிர்ரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட முன்மொழிவை சீனா தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அதே நிலைப்பாட்டை சீனா கையில் எடுத்து உள்ளது.