டெல்லி: நீதிமன்ற அறைக்குள் செல்போனில் பேசிக் கொண்டிருந்த ஒரு வழக்கறிஞரைப் பார்த்து இந்திய தலைமை நீதிபதி (Chief Justice of India) டி.ஒய்.சந்திரசூட் கோபமடைந்தார். வழக்கறிஞரிடம், "இது என்ன சந்தையா, இங்கே வா. செல்போனைக் கொடு” என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
பின்னர் அந்த வழக்கறிஞரின் செல்போனை கோர்ட் மாஸ்டரிடம் கொடுக்கும் படி தலைமை நீதிபதி கூறினார். மேலும், "இது ஒரு சந்தை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அங்கு நீங்கள் எடுத்துச் செல்லலாம். கோர்ட் மாஸ்டரிடம் செல்போனைக் கொடுங்கள். எதிர்காலத்தில் கவனமாக இருங்கள்" என மீண்டும் கூறினார்.
மேலும், அவர், "நாங்கள் கோப்பில் மட்டும் கவனம் செலுத்துகிறோம் என நீங்கள் நினைக்க வேண்டாம். நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதையும் கவனித்துக்கொள்கிறோம்" என தலைமை நீதிபதி கூறினார். பின்னர், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணையைத் தொடர்ந்தது.