95-வது ஆஸ்கர் அகாடமியின் விருதுக்காக இந்தியாவின் சார்பாக இந்த ஆண்டு, இயக்குநர் பான் நலின் இயக்கத்தில் உருவான குஜராத்தி திரைப்படமான 'செல்லோ ஷோ' (தி லாஸ்ட் ஃபிலிம் ஷோ) திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் அக்டோபர் 14அன்று, இந்திய திரையரங்குகளில் வெளியான நிலையில், வரும் 25-ம் தேதி முதல் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் ஹிந்தியிலும் டப் செய்ப்பட்டு நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
குஜராத் இயக்குநர் பான் நலின் இயக்கிய ’தி லாஸ்ட் ஃபிலிம் ஷோ’ திரைப்படம், பெரும் சினிமா தேடல்களை கொண்ட ஓர் சிறுவனை பற்றியும், பிலிம் ரோல் காலகட்டத்திலிருந்து டிஜிட்டல் காலகட்டத்திற்கு சினிமா மாறிய போது பாதிப்படைந்தவர்களின் உணர்வுகளைக் கடத்தும் படமாக அமைந்துள்ளது.
’தி லாஸ்ட் ஃபிலிம் ஷோ’, ட்ரிபெகா, பியூனஸ் அயர்ஸ் இன்டர்நேஷனல் ஃபெஸ்டிவல் ஆஃப் இன்டிபென்டன்ட் சினிமா போன்ற உலகெங்கிலும் உள்ள மதிப்புமிக்க திரைப்பட விழாக்களில் பரிந்துரைக்கப்பட்டு திரையிடப்பட்டது. சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஆசிய உலகத் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதையும் பெற்றது. மேலும் கோவாவில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) சிறப்புத் திரையிடல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'வாரிசு' படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய "7 ஸ்கிரீன் ஸ்டுடியோ"