பெங்களூரு:நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த 2019ஆம் ஆண்டு அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியது. சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கினாலும், ஆர்பிட்டர் செயல்பாட்டில் உள்ளது. சந்திரயான்-2 திட்டத்தின் தோல்வியைத் தொடர்ந்து, பல்வேறு மேம்பாடுகளுடன் சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. பல்வேறு கட்ட பயணத்திற்குப் பிறகு சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் திட்டமிட்டபடி கடந்த 23ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. விக்ரம் லேண்டரில் இருந்த பிரக்யான் ரோவரும் வெற்றிகரமாக வெளியே வந்து ஆய்வை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமை இந்தியா பெற்றுள்ளது. சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியை இஸ்ரோ விஞ்ஞானிகள், நாட்டு மக்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.
சந்திரயான்-3 லேண்டர் நிலவில் தரையிறங்கிய அன்று, பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டிற்காக தென்னாப்பிரிக்காவில் இருந்தார். லேண்டர் தரையிறங்கும்போது அங்கிருந்து காணொளி வாயிலாக அதனை பார்வையிட்டார். லேண்டர் தரையிறங்கிய பிறகு விஞ்ஞானிகளுக்கு காணொளி வழியாக வாழ்த்துக் கூறினார்.