ஐதராபாத் : சந்திரயான்3 விண்கலம் விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாகவும், விண்கலத்தை ஏவுவதற்கான இறுதி கட்ட பணிகள் தீவிரமடைந்து உள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் பணிகளை நிறைவு செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும் இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈட்பட்டு உள்ளன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவும் நிலவின் தென்துருவத்தை ஆராயும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக சந்திரயான் திட்டத்தை உருவாக்கிய இஸ்ரோ, கடந்த 2008ஆம் ஆண்டு சந்திரயான்1 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது.
அதன் தொடர்ச்சியாக கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் சந்திரயான் 2 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தில் இறக்கி ஆராயும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டது. இதற்காக LVM2 ராக்கெட் மூலம் சந்திரயான் விணகலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. நிலவின் தென்துருவத்தை அடைய குறுகிய இடைவெளியே இருந்த நிலையில், விணகலத்தினுடான இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மேலும் விண்கலத்தின் லேண்டர் கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், நிலவில் லேண்டர் விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்டது. அதேநேரம் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
சந்திரயான் 3 விண்கலத்தை நாட்டின் மிகப் பெரிய ராக்கெட் அமைப்பான LVM3 மூலம் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. அண்மையில் இதற்கான கிரியோஜினிக் மற்றும் சோதனை ஓட்ட பணிகளை இஸ்ரோ மேற்கொண்டது. இந்நிலையில் ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.
விண்கலத்தை விண்ணில் ஏவ ஒத்திகை பார்க்கப்பட்டது. ஒத்திகை வெற்றிகரமாக அமைந்ததாக தெரிவித்து உள்ள இஸ்ரோ அடுத்த 24 மணி நேரத்தில் ராக்கெட்டை விண்ணில் செலுத்த தயார் நிலையில் வைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த முறை ஏற்பட்ட தோல்வியில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டு உள்ள இஸ்ரோ பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு ஏற்ப ஆர்பிட்டரை நிலைநிறுத்தும் முயற்சிக்கான சோதனையில் ஈடுபட்டது. லேண்டர் மற்றும் ரோவரில் உள்ள தொழில்நுட்பங்களை பரிசோதிக்கும் பணியும் வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜூலை 14ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் வைத்து சந்திரயான்3 விண்கலம் ஏவ திட்டமிடப்பட்டு உள்ள நிலையில், அதற்கான திட்டங்களை 10 வகைகளாக பிரித்து அதற்கேற்ற வகையில் பணியாற்றி வருவதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான கவுன்டவுன் போட உள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க :அதீத செலவில் நடக்கும் பொதுக்கூட்டங்களால் என்ன பயன்? தேர்தலில் புழங்கும் பணம்: இது தான் உண்மையான ஜனநாயகமா?