தமிழ்நாடு

tamil nadu

நிலவை நோக்கி "சந்திரயான்-3" : பாதுகாப்பாக தரையிறக்கும் பணிகளில் இஸ்ரோ தீவிரம்!

By

Published : Aug 15, 2023, 11:54 AM IST

Chandrayaan-3: நிலவை நெருங்கிக் கொண்டிருக்கும் சந்திரயான் -3 விண்கலம், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க இன்னும் ஒரு வார காலமே உள்ளது. விண்கலத்தை பாதுகாப்பாக தரையிறக்குவதற்கான பணிகளில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது.

Moon
சந்திரயான்3 கோப்பு

ஹைதராபாத்: நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த 2008ஆம் ஆண்டு விண்ணில் ஏவியது. நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்த இந்த விண்கலம் பல அரிய புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. அதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். நிலவு ஆராய்ச்சியில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஈடுபட்டிருந்தபோதும், முதல் முறையாக நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை உறுதி செய்தது இந்தியாவின் சந்திரயான் விண்கலம்தான்.

இதனால், உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை திரும்பிப் பார்த்தன. சந்திரயான்-1 திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கடந்த 2019ஆம் ஆண்டு சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட இந்த விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக பயணித்த போதும், தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டு அத்திட்டம் தோல்வியடைந்தது.

இதையடுத்து அடுத்த ஆண்டே சந்திரயான்-3 திட்டத்தை இஸ்ரோ தொடங்கியது. சந்திரயான்-2 விண்கலத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் அனைத்தையும் கலைந்து, மேம்படுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக சந்திரயான்-3 திட்டம் தள்ளிப்போன நிலையில், 2023ஆம் ஆண்டு சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது. அதன்படி, சுமார் 615 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ஆம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த விண்கலம் கடந்த 5ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது. அதன் பிறகு, சுற்றுப்பாதையின் உயரத்தை படிப்படியாக குறைத்து, நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்குவதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். ஒரு மாதத்தை கடந்து வெற்றிகரமாக சந்திரயான்-3 விண்கலம் பயணித்து வருகிறது. நேற்று (ஆகஸ்ட் 14) மூன்றாவது முறையாக சுற்றுப்பாதையின் உயரம் குறைக்கப்பட்டு, விண்கலம் மேலும் நிலவை நெருங்கிச் சென்றது.

வரும் 23ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் பாதுகாப்பாக தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான அனைத்து தொழில்நுட்ப ஏற்பாடுகளையும் இஸ்ரோ செய்துள்ளது. சந்திரயான்-3 விண்கலம் நிலவின் மேற்பரப்பை மட்டுமல்லாமல், சூரிய மண்டலத்தின் மற்ற பகுதிகளையும் ஆராய உதவும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியிருந்தார். சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்தால், அது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு மேலும் ஊக்கமளிக்கும் என்றும் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன் கூறினார்.

அதேபோல், சந்திரயான்-3 விண்கலம் தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்திருந்த இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், சந்திரயான்-3 திட்டம் நிச்சயமாக வெற்றியடையும் என்றும், இத்திட்டம் உலக நாடுகள் அனைத்திற்கும் உத்வேகம் அளிக்கும் என்றும் கூறினார். நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வது, எதிர்கால விண்வெளி ஆராய்ச்சிக்கு மிகவும் முக்கியம் என்றும் கூறினார்.

சந்திரயான்-3 நிலவில் தரையிறங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. தற்போதைய நிலவரப்படி, நிலவை நோக்கியப் பயணத்தில் மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை சந்திரயான்-3 விண்கலம் கடந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: நிலவை நெருங்கும் சந்திரயான் 3 - மூன்றாவது முறையாக சுற்றுப்பாதை உயரம் குறைப்பு!

ABOUT THE AUTHOR

...view details