அமராவதி:ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் குண்டூர் மற்றும் நெல்லூர் பொதுக் கூட்டங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏறத்தாழ 11 பேர் உயிரிழந்தனர். இது அம்மாநிலத்தின் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பொதுக் கூட்டங்களுக்கு ஜெகன் மோகன் ரெட்டி அரசு தடை விதித்தது.
இந்நிலையில், குப்பம் தொகுதியில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சந்திரபாபு நாயுடு காரில் வந்தார். குடுபள்ளி அருகே சந்திரபாபு நாயுடுவின் காரை வழிமறித்த போலீசார், பொதுக் கூட்டங்கள் நடத்த விதிக்கப்பட்டுள்ள தடை ஆணையை சந்திரபாபு நாயுடுவிடம் வழங்கினர்.
போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடு, மேற்கொண்டு நகர முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சந்திரபாபு நாயுடுவின் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் கோபமடைந்த அவர் அருகில் இருந்த தனியார் பேருந்தின் மீது ஏறி குழுமியிருந்த மக்களிடையே பேசத் தொடங்கினார்.