டெல்லி:மனதின் குரல் நிகழ்ச்சியின் 93ஆவது பதிப்பில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப் 25) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி, "இன்றிலிருந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, அதாவது செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியன்று அமுதப் பெருவிழாவின் ஒரு விசேஷமான நாள் வரவிருக்கிறது. அன்று நம் நாட்டின் வீரம் நிறைந்த பகத் சிங்குடைய பிறந்த நாளைக் கொண்டாடுவோம். பகத் சிங்கின் பிறந்த நாளுக்கு சற்று முன்பாக, அவருக்கு சிரத்தாஞ்ஜலிகளை அர்ப்பணிக்கும் பொருட்டு ஒரு மகத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சண்டிகர் சர்வதேச விமான நிலையத்துக்கு ஷாஹீத் பகத் சிங் பெயர் சூட்டப்படும். இது மிக நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்று. நாம் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களிடமிருந்து கருத்தூக்கம் பெற வேண்டும். அவர்களின் லட்சியங்களைப் பின்பற்றி நடந்து, அவர்கள் கண்ட கனவு பாரதத்தை உருவாக்க வேண்டும். இதுவே, அவர்களுக்கு நாம் செலுத்தும் நினைவாஞ்சலிகளாகும்.