டெல்லி:குற்ற வழக்குகளில் அதிகபட்ச தண்டனையை உறுதி செய்யும் வகையில் காலனித்துவ ஆட்சியால் உருவாக்கப்பட்ட சட்டங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி அதற்கான மூன்று மசோதாக்கள் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவின் மதிப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அனுமதி கிடைத்த பிறகு இந்த மசோதா அமல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மாற்றி அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் குற்றங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குற்றவியல் தண்டனை சட்டத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்திலும் ஆண், பெண் உள்ளிட்ட அனைவருக்கும் நடுநிலையான தண்டனை வழங்கும் வகையில் மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாத செயல்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கான தண்டனை தடுப்பு சட்ட மசோதாவும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தியத் தண்டனை சட்டம் பெயர் மாற்றம்; இந்தியத் தண்டனைச் சட்டம் ஐபிசி 1860 பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) மசோதா 2023 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிஏ) 1898 பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) மசோதா 2023 என மாற்றப்பட்டுள்ளது மேலும், இந்திய ஆதாரச் சட்டம் 1872 பாரதிய சாக்ஷிய (பிஎஸ்) மசோதா 2023 என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம்; பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு பத்து ஆண்டு சிறைத் தண்டனையும் தேவைப்படும் பட்சத்தில் அது ஆயுள் தண்டனையாக நீட்டிக்கப்படும் என இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 20 ஆண்டு முதல் ஆயுள் வரை சிறைத் தண்டனை வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.
குறிப்பாக 18 வயதிற்கு உட்பட்ட பெண் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டால் அவர்களுக்கு அபராதத்துடன் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அது ஆயுள் வரை நீட்டிக்கப்படும் வகையிலும் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகப் பொய்யான வாக்குறுதி கொடுத்து அவரை உடலுறவுக்கு உட்படுத்தி திருமணம் செய்யாமல் ஏமாற்றுதல், மத ரீதியான ஏமாற்றல் உள்ளிட்ட பல குற்றங்களுக்கு அபராதத்துடன் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க மசோதா வழிவகை செய்கிறது.