பிரபல யோக ஆசிரியர் பாபா ராம்தேவ்வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மருத்துவக் கூட்டமைப்பு (IMA-Indian Medical Association) சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவக் கூட்டமைப்பு மத்திய சுகாதாரத்துறைக்கு எழுதியுள்ள அக்கடிதத்தில், "ஆங்கில வழி மருத்துவம் (அலோபதி) முட்டாள்தனமான அறிவியல், அலோபதி மருந்துகளை எடுத்துக்கொண்டு லட்சக்கணக்கான மக்கள் மடிந்துள்ளனர் என ராம்தேவ் பொறுப்பற்ற முறையில் பேசி, மக்களை தவறான முறையில் வழிநடத்த முயல்கிறார். அறிவியலுக்கு புறம்பாகவும் மருத்துவத்தை அவமதிக்கும் விதமாகவும் இவரின் பேச்சு உள்ளது.
மத்திய சுகாதார அமைச்சரே நவீன அலோபதி மருத்துவர் என்ற முறையில் இவரின் பேச்சுக்கு உரிய பதிலடி தர வேண்டும். ஒன்று ராம்தேவ்வின் பேச்சு உண்மை என்றால் நவீன மருந்துவத்தை களைத்துவிட வேண்டும், அல்லது முறை தவறி பேசிய ராம்தேவ்மீது பேரிடர் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருந்தொற்று காலத்தில் மக்களின் பயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தக்கொள்ள ராம்தேவ் திட்டமிடுகிறார்" என கடிதத்தில் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
ஏற்கனே "கரோனில்"(coronil) என்ற பெயரில் கரோனாவுக்கான மருந்து என ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம் அறிமுகம் செய்து விற்பனை செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ராம்தேவின் இந்தப் பேச்சு புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க:'ராஜாராம் மோகன் ராய்' - இந்தியச் சமூகத்தில் சீர்திருத்தத்தை விதைத்த முதல் குரல்