டெல்லி: இந்தியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு, கடந்த 27ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகி பல்வேறு வாதங்களை முன்வைத்தார். தன்பாலினத் திருமணத்தில் சமூக பிரச்னைகள் நிறைந்திருப்பதால், இது குறித்து நாடாளுமன்றம் முடிவெடுப்பதுதான் சரியாக இருக்கும் என்றும், இந்த விவகாரத்தை தீர்ப்புகள் மூலம் வரையறுப்பது மிகவும் கடினம் என்றும் துஷார் மேத்தா வாதிட்டார்.
அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட், தன்பாலினத் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்காவிட்டால், அவர்களுக்கான சமூக உரிமைகளை எப்படி பெறுவார்கள்? என்று கேள்வி எழுப்பினார். மேலும், தன்பாலின தம்பதிகள் கூட்டாக வங்கிக் கணக்கு தொடங்குவது, காப்பீடுகளில் நாமினிக்களை பரிந்துரைப்பது போன்ற அடிப்படை சமூக உரிமைகளை வழங்குவதற்கான வழிகளை அரசு கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார்.