டெல்லி: ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் உறவு கொள்ளும் ஓரினச்சேர்க்கை தவறானது என்றும், இதுபோன்ற பாலியல் உறவுகள் சட்டத்துக்கு எதிரானது எனவும் இந்தியத் தண்டனை சட்டப்பிரிவு 377-ன் கீழ் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கைக் கடந்த 2018ம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், ஓரினச்சேர்க்கை குற்றமில்லை எனத் தீர்ப்பளித்தது.
அத்துடன் சட்டப்பிரிவு 377 அதிரடியாக நீக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் ஓரினச்சேர்க்கை சட்டப்பூர்வமாக்கப்பட்டது. இந்த தீர்ப்பை பாலியல் சிறுபான்மையினர் வெகுவாக வரவேற்றனர். அதன் அடிப்படையில், ஒரே பாலினத்தைச் சேர்ந்த ஜோடிகள் திருமணமும் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க கோரி, பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தாங்களே விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.
அதன்படி, இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நரசிம்மா, பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நாளை (மார்ச் 12) விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "சமூகத்தை பொறுத்தவரை பல வகையான உறவுகள் இருக்கலாம். ஒரே பாலின தம்பதிகளுக்கு அந்தந்த மாநிலங்கள் அங்கீகாரம் வழங்காமல் இருக்கலாம். ஆனால் அவை சட்டவிரோதமானவை அல்ல. ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் கணவன் - மனைவி போல் ஒன்றாக சேர்ந்து வாழ்வது தற்போது சட்டப்படி குற்றம் இல்லை. ஆனால் அதை ஒரு கணவன், மனைவி, குழந்தைகள் இருக்கும் குடும்பத்துடன் ஒப்பிட முடியாது.