அதிதீவிரப் புயலான யாஸ், கடந்த மே 26ஆம் தேதி ஒடிசாவின் வடக்குப் பகுதியில் உள்ள பாலாசோர் அருகே கரையைக் கடந்தது. இந்தப் புயல் காரணமாக மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டன. ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தில் உள்ள தம்ரா பகுதியில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
மேலும், இந்த யாஸ் புயல் காரணமாக, மேற்குவங்கத்திலும் கடும் சேதங்கள் ஏற்பட்டன. மூன்று லட்சம் வீடுகள் சேதமடைந்ததாகவும், 134 நீர்நிலைகளின் கரைகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
புயலால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 28ஆம் தேதி பார்வையிட்டார். சேதங்களைக் கணக்கிட்ட அவர், இரண்டு மாநிலங்களுக்கும் சேர்த்து புயல் நிவாரண நிதியாக ஆயிரம் கோடி ரூபாய் அறிவித்தார்.
இந்நிலையில், புயல் சேதங்கள் குறித்து இரண்டு மாநிலங்களிலும் மூன்று நாள்கள் மத்திய அரசின் ஏழு உறுப்பினர்கள் கொண்ட குழு ஆய்வுசெய்கின்றனர்.
அதன்படி, இன்று (ஜூன் 7) அந்தக் குழுவினர் பூர்பா மெடினிபூர் மாவட்டத்தில் உள்ள திகா, மந்தர்மனி பகுதிகளைப் பார்வையிடவுள்ளனர். அவர்களுக்கு யாஸ் புயலால் ஏற்பட்ட சேதத்தை மாநில அரசு அலுவலர்கள் எடுத்துரைப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.