டெல்லி :புதிய நாடாளுமன்றத்தை மே மாத இறுதிக்குள் திறக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற கட்டட திறப்பு குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மத்திய பொதுப் பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் புதிய நாடாளுமன்றத்தை அலங்கரிக்கத் தேவையான மலர்கள் உள்ளிட்ட அலங்காரங்களுக்கான 14 லட்ச ரூபாய் டெண்டரை மத்திய பொதுப்பணித்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக விரைவில் நாடாளுமன்றம் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என பொதுபணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் முன்னிலையில் பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றத்தை திறக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கட்டுமானப் பணிகளை பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவுக்கான தேதியை மத்திய அரசு அறிவிக்கும்பட்சத்தில் அடுத்த மூன்று நாட்களுக்குள் நாடாளுமன்றத்தை அலங்கரிக்க வேண்டும் என்பதால் சிறந்த அலங்கார நிறுவனத்திற்கு நாடாளுமன்றக் கட்டடத்தை அலங்கரிக்கும் டெண்டரை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக கூறப்படும் நிலையில், கட்டுமானப் பணிகளின் இறுதி கட்டம் குறித்த ஆய்வுகள் பரபரப்பாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் செயலர் மனோஜ் ஜோசி மற்றும் மத்திய பொதுப்பணித்துறை செயலாலர் சைலேந்திர சர்மா ஆகியோர் நாடாளுமன்ற கட்டடத்தின் கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
இந்திய நாடாளுமன்றம் கட்டப்பட்டு 93 ஆண்டுகள் ஆன நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடத்தை அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு சென்ட்ரல் விஸ்டா என்ற திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. இந்த திட்டத்தின்கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டடம், மற்றும் மத்திய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 900 முதல் 1200 எம்.பி.க்கள் வரை அமரலாம் என்றும் நாடாளுமன்றத்தை கட்டும் திட்டத்திற்கு 971 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது என்றும் தெரிகிறது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமானப் பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இதையும் படிங்க :தேச விரோத சட்டப்பிரிவுக்கு எதிரான மனு - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியது என்ன?