டெல்லி : பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மானுக்கு Z-plus பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. உள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அவருக்கு மிரட்டல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) வீரர்கள் பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மானுக்கு விஐபி பாதுகாப்பு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு துப்பாக்கி ஏந்திய 55 சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பொறுப்பை கையில் எடுப்பார்கள் என மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
நாடு முழுவதும் அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் இந்த Z-plus பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் போலீசார் வழங்கி வரும் பாதுகாப்பை தவிர்த்து, பஞ்சாப் முதலமைச்சரின் வீடு, அலுவலகம், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பகவந்த் மானுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதாக மத்திய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் வழங்கிய தகவலை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். காலிஸ்தான் விவகாரத்தில் பக்வந்த் மான் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் தொழில்முனைவோரும் மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் தலைவரும், ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சியின் தலைவருமான முகமது அல்தாப் புகாரிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக Z-plus பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.