பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏவும், கர்நாடக அமைச்சருமான ரமேஷ் ஜர்கிஹோலி கடந்த சில நாள்களுக்கு முன்பு பாலியல் புகார் ஒன்றில் சிக்கினார். இது தொடர்பான காணொலியை சமூக செயற்பாட்டாளர் ஒருவர் வெளியிட்டிருந்தார். இவ்விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து ரமேஷ் ஜர்கிஹோலி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், தன்மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான புகார்களைச் சிலர் வேண்டுமென்று கூறுவதாக அமைச்சர் தரப்பில் கூறப்பட்டது.
இது தொடர்பாக அமைச்சரின் வழக்கறிஞர் எம்.வி. நாகராஜ் புகார் ஒன்றையும் அளித்தார். இவ்வழக்கை விசாரித்துவரும் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்திவருகிறது. அமைச்சருக்கு எதிராகக் கொடுக்கப்பட்டுள்ள சிடி ஆதாரத்தில் உள்ள குரல் மாதிரிகளைச் சோதனை செய்துள்ளனர்.
மேலும், சிடி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் தலைமறைவாக உள்ளாரா அல்லது யாரேனும் கடத்திவைத்துள்ளார்களா என்ற கோணங்களில் விசாரணையை முடக்கியுள்ளனர்.
இந்நிலையில், சிடி வழக்கை விசாரிக்கும் எஸ்ஐடி, இறுதியாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் வாக்குமூலத்தைப் பதிவுசெய்துள்ளனர். அவர்கள் உள்ளூர் காவல் நிலையத்தில் தங்களது மகள் கடத்தப்பட்டுள்ளார் என்று புகார் அளித்ததைத் தொடர்ந்து, பெலகாவியில் உள்ள பெண்ணின் பெற்றோரிடம் எஸ்ஐடி விசாரணை நடத்தியுள்ளது.
கிடைத்த தகவலின்படி, பாதிக்கப்பட்ட பெண், பெற்றோரிடம் மூன்று முறை தொலைபேசியில் பேசியுள்ளார். ஒவ்வொரு முறையும், கோவா, பெங்களூரு, சென்னை எனப் பல இடங்களிலிருந்து கால் செய்துள்ளனர்.
முதல் முறை, கோவாவிலிருந்து கால் செய்கையில், தான் பத்திரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பின்னர், பெங்களூருவிலிருந்து பேசியுள்ளார். அடுத்ததாக, சென்னையிலிருந்து கால் செய்த அப்பெண், தான் மன அழுத்தத்தில் இருப்பதாகவும், மிகவும் பயமாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.
தற்போது, அவரைத் தொடர்புகொள்ள முடியாததால், யாரேனும் கடத்தியிருக்கலாம் எனப் பெற்றோர் சந்தேகிக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண் பேசிய அனைத்து அழைப்புப் பதிவுகளும் அவரது சகோதரனிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவரையும் காவல் துறையினரால் தற்போதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையும் படிங்க:'மாநில அரசா, சிடி அரசா' - கர்நாடக பேரவையில் அமளியில் ஈடுபட்ட காங். உறுப்பினர்கள்