கல்லூரிகள் ராகிங்கை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
பல்கலைக் கழக மானியக்குழுவின் செயலாளர் ராஜ்நிஷ் ஜெயின் துணைவேந்தர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி , உயர்கல்வி நிறுவனங்களில் ராகிங் தடை செய்யப்பட்டு இருப்பதால் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என்று ஒவ்வொரு மாணவரும், மாணவரின் பெற்றோரும் www.antiragging.in என்கிற இணையதளத்தில் பதிவு செய்திருப்பதை உறுதி செய்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகிங்கைத் தடுக்க உயர்கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் எனவும் எச்சரிக்கை மணியை பொருத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராகிங்குக்கு எதிரான விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும்; விடுதிகள், உணவகம் ஆகிய இடங்களில் ராகிங் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு போஸ்டர்களை ஒட்ட வேண்டும்; ராகிங்கை கண்காணிப்பதற்கான குழுக்களை அமைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் ராகிங் தடுப்பதற்கான 24 மணி நேர தொடர்பு எண் 1800 180 44577, www.antiragging.in என்ற இணையதள முகவரியையும் , கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் தொடர்பு எண்களையும் விழிப்புணர்வு போஸ்டர்களில் இடம்பெற வேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் 37 நோயாளிகளுக்கு எதிர்வினை நோய் பாதிப்பு