கர்நாடகா: தற்போதைய கர்நாடக காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரின் பேரில், கடந்த 2017ஆம் ஆண்டு ராமநகர், பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட இடங்களில் உள்ள டி.கே.சிவக்குமாரின் அலுவலகம், வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இதில், டெல்லியில் உள்ள அவரது வீட்டிலிருந்து 8.5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வருமான வரித்துறை வழக்குப் பதிவு செய்தது. அதேபோல், சட்டவிரோத பணப்பரிமாற்றத்திலும் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையும் டி.கே.சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. கடந்த 2019ஆம் ஆண்டு சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தார் டிகே. சிவக்குமார்.
இதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை எதிர்த்து டி.கே.சிவக்குமார், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் டி.கே.சிவகுமார் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று(மே.17) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சொத்துக்குவிப்புத் தொடர்பான வழக்கு வரும் 23ஆம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருப்பதாக டி.கே.சிவக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜூலை 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: "2019ல் காங்- ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி கவிழ சித்தராமையா முக்கிய காரணம்" - கே.சுதாகர் பரபரப்பு குற்றச்சாட்டு!