ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் தன்பாத்தின் நீதிபதி உத்தவ் ஆனந்த் கடந்த ஆண்டு ஜூலை 28 அன்று சாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டது. பின்னர் அது கொலை என உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரித்து வருகின்றனர்.
தற்போது தன்பாத்தின் பிரபல நீதிபதி உத்தம் ஆனந்த் கொலை வழக்கில் மேலும் உண்மைகளை வெளிக்கொணர சர்வதேச குற்றவியல் போலீஸ் அமைப்பின் (இன்டர்போல்) உதவியை சிபிஐ பெற உள்ளது. இந்த வழக்கின் முடிக்கப்பட்ட முழு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது "இன்டர்போலின்" உதவியை நாடுவோம் என ஜார்கண்ட் புலனாய்வு குழுமம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது.
இதற்கு அனுமதி கோரி உள்துறை அமைச்சகத்திடம் சிபிஐ விண்ணப்பித்துள்ளது. தற்போது இந்த கோரிக்கை நிலுவையில் உள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைத்த பின்னர், சிபிஐ விசாரணையை தொடங்கும். இதற்கிடையில் இந்த கொலை வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபர் 14 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும் வழக்கின் முழு அறிக்கையை நான்கு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி டாக்டர் ரவி ரஞ்சன் மற்றும் நீதிபதி சுஜித் நாராயண் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.