பிகார்: லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த போது, நில மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டினர். குறிப்பாக ரயில்வே வேலை வாங்கி தருவதற்கு நிலம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதில், வேலை பெற்றவர்கள் தங்களின் நிலங்களைப் பரிசாகவோ, குறைந்த விலைக்கோ, லாலு பிரசாத் குடும்பம் மற்றும் பினாமி பெயர்களில் எழுதி தருவதாகவும், இதன் மூலம் கோடிக் கணக்கில் மோசடி நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், பாட்னா மற்றும் டெல்லியில் லாலுவுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (மார்ச் 10) சோதனை மேற்கொண்டனர். இதில், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் கணக்கில் அடங்காத பல லட்சம் ரூபாய் பணமும், தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகின.