டெல்லி :அகிலுஸ்சம்மா கான் என்பவர் இந்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயில் தலைமைக் காவலராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று உள்ளார். இந்நிலையில், வரம்புக்கு மீறி சொத்து சேர்த்ததாக அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த அகிலுஸ்சம்மா கான், கடந்த 1993 ஆம் ஆண்டு டெபுடேஷன் எனப்படும் பிரதிநிதித்துவ அடிப்படையில் சிபிஐயில் பணிக்கு சேர்ந்தார். அதுமுதலே அவர் சிபிஐயில் தலைமை காவலர் அந்தஸ்துக்கு பணி உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு அகிலுஸ்சம்மா கான் விருப்ப ஓய்வு பெற்றார். இந்நிலையில், தலைமைக் காவலராக பதவி வகித்த போது வரம்புக்கு அதிகமாக அகிலுஸ்சம்மா கான் சொத்து சேர்த்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ஏப்ரல் 1ஆம் தேதி 2014 முதல் 31ஆம் தேதி மார்ச் 2018 வரையில் தனது மனைவி மற்றும் மகன் பெயரில் பல்வேறு சொத்துகளை அகிலுஸ்சம்மா கான் வாங்கிக் குவித்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
அதேநேரம் இந்த குறிப்பிட்ட நேரத்தில் தான் அகிலுஸ்சம்மா கான் பல்வேறு முக்கிய புள்ளிகள் குறித்து வழக்குகளை விசாரித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 8 ஆயிரத்து 515 ரூபாயாக இருந்த அகிலுஸ்சம்மா கானின் மதிப்பு இந்த இடைப்பட்ட காலத்தில் 3 கோடியே 73 லட்ச ரூபாயாக உயர்ந்ததாக கூறப்பட்டு உள்ளது.
மேலும், அதே குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அகிலுஸ்சம்மா கான் ஒரு கோடியே 26 லட்ச ரூபாய் செலவு செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக அகிலுஸ்சம்மா கான் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அளவுக்கு அதிகமாக 2 கோடியே 93 லட்ச ரூபாய் மதிப்பில் சொத்து கையிருப்பு உள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஏறத்தாழ 4 ஆண்டுகள் இடைவெளியில் அகிலுஸ்சம்மா கானின் சொத்து மதிப்பு 70 சதவீதம் வரை அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2021ஆம் ஆண்டு அவர் விருப்ப ஓய்வு பெற்ற நிலையில், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க :டெல்லியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி சாத்தியமா? பேச்சுவார்த்தையில் என்ன முடிவு?