மும்பை: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சமீபத்தில் மூன்று நாள் பயணமாக மும்பை வந்திருந்தார். மும்பை பயணத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றார்.
அப்போது அவர் பங்கேற்ற நிகழ்வின் இறுதியில் தேசிய கீதத்தைப் பாடிய மம்தா பானர்ஜி, முதல் நான்கு, ஐந்து வரிகளுக்குப் பின் முழுமையாகப் பாடாமல், பாதியில் நிறுத்திவிட்டார் என மேற்கு வங்க பாஜக குற்றஞ்சாட்டியிருந்தது.
இது தொடர்பாக பாஜகவின் ட்விட்டர் பக்க பதிவில் தேசிய கீதம் அவமதிப்புத் தொடர்பான மம்தாவின் அந்தக் காணொலி இணைக்கப்பட்டுள்ளது. வங்கத்தின் கலாசாரத்தையும், தேசிய கீதத்தையும், இந்த நாட்டையும், ரவீந்திரநாத் தாகூரையும் ஒரு முதலமைச்சராக மம்தா அவமதித்துள்ளார் எனவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.