சண்டிகர்: பஞ்சாப் முதலமைச்சராக இருந்த அம்ரீந்தர் சிங், கடந்தாண்டு தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் . அதன்பிறகு, 'பஞ்சாப் லோக் காங்கிரஸ்' என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி, சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். தேர்தலில், இக்கூட்டணி படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில், அமரீந்தர் சிங் தனது 'பஞ்சாப் லோக் காங்கிரஸ்' கட்சியை விரைவில் பாஜகவுடன் இணைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவில் இணைந்த பிறகு அமரீந்தர் சிங்கிற்கு, பாஜகவில் பெரிய பதவிகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
வரும் 2024ஆம் ஆண்டில், மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பஞ்சாப்பில் உள்ள 13 மக்களவை தொகுதிகளையும் கைப்பற்றும் முனைப்பில் பாஜக உள்ளது. அமரீந்தரின் புதிய கட்சியின் இணைப்பு, அதற்கான முயற்சியாகவும் பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.
கடந்தாண்டு அமரீந்தர் சிங் காங்கிரஸில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, அவருக்கு நெருக்கமான நான்கு முன்னாள் அமைச்சர்கள், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். எனவே, அவர்களும் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளது. தற்போது, அமரீந்தர் சிங் முதுகு அறுவை சிகிச்சைக்காக லண்டனில் உள்ளார். அடுத்த வாரம் அவர் நாடு திரும்பியதும், இரு கட்சிகளின் இணைப்பு நடவடிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:'உதய்பூர் கொலை: பயங்கரவாத அமைப்புக்குத்தொடர்பில்லை...ஆனால்':என்ஐஏ புதிய தகவல்!