கரோனா இரண்டாம் அலை காரணமாக சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ரத்துசெய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது.
மேலும், சிபிஎஸ்இ நிர்வாகம் தரப்பில் அமைக்கப்பட்ட 13 பேர் அடங்கிய குழுவினர், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் முறை குறித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல்செய்தனர்.
வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண்
அதில், "பத்து, பதினொன்று, பன்னிரெண்டு ஆகிய மூன்று வகுப்புகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் விகிதாச்சார அடிப்படையில், அதாவது வெயிட்டேஜ் முறையில் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வின் மதிப்பெண்களாக வழங்கப்படும்.
திருப்தி இல்லாத மாணவர்களுக்கு மட்டும் தேர்வு
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மதிப்பெண் திட்டத்தில் திருப்தி இல்லாத, நேரடித் தேர்வு எழுத விருப்பம் உள்ள மாணவர்களுக்கு ஆகஸ்ட் 15 - செப்டம்பர் 15 தேதிக்குள் தேர்வு நடத்தப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
1152 மாணவர்கள் கூட்டு மனு தாக்கல்
இந்நிலையில், சிபிஎஸ்இ தேர்வை எதிர்த்து 1152 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் கூட்டு மனு தாக்கல்செய்துள்ளனர். அந்த மனுவில், சிபிஎஸ்இ நிர்வாகத்தின் குறைகள், ஆட்சேபனைகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்
இந்தத் தேர்வு தொடர்பான வழக்குகள் நீதிபதி ஏ.எம். கான்வில்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பெற்றோர் சங்கம் ஒன்று, தேர்வு எழுத விருப்பம் உள்ள மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், ஐ.சி.எஸ்.இ., சிபிஎஸ்இ கொள்கைகளில் ஒற்றுமை இருக்க வேண்டும் என வாதிட்டது.
அவர்களுக்காக முன்னிலையான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், "இந்த இரண்டு வாரியங்களின் திட்டங்களில் வித்தியாசம் இருக்கின்றது. ஆசிரியர்களால்கூட அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. மாணவர்களின் செயல்திறன்களை முறையாக ஆவணப்படுத்தாத பள்ளிகளில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பீடு செய்யக்கூடாது
ஐ.சி.எஸ்.இ., சிபிஎஸ்இ ஆகியவைகளுக்கு இடையே வேறுபாடு உள்ளது என ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பீடு செய்யக்கூடாது எனத் தெரிவித்தது.
இன்று மீண்டும் விசாரணை
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர் தலைமையிலான அமர்வில் இன்று காலை 11 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வு விவகாரத்தில் இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:ஆக.15-க்குப் பின்னர் விரும்பும் மாணவர்களுக்கு நேரடித் தேர்வு - சிபிஎஸ்இ