டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தி விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவித்து, மகரிஷி வால்மீகி பன்னாட்டு விமான நிலையம், அயோத்தியாதம் என பெயர் வைப்பதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று (ஜனவரி 5) ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 30ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தி விமான நிலையத்தை திறந்து வைத்தார். தற்போது பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அயோத்தி விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள குறிப்புகளில், ராமாயணத்தை இயற்றிய முனிவர் வால்மீகியை மரியாதை செலுத்தும் விதமாகவும், கலாச்சாரத் தொடர்பை ஏற்படுத்தவும் அயோத்தி விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி பன்னாட்டு விமான நிலையம், அயோத்தியாதம் என பெயர் வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.