இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தேசிய தொழிற்பயிற்சித் திட்டத்தின் கீழ் பயிற்சி பெரும் பயிற்சியாளர்களுக்கு மாதந்திர உதவித்தொகையை அளிப்பதற்காக ரூ. 3,054 கோடி ஒதுக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்புதலினால், கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த திட்டம் 2021-22 ஆண்டு முதல் 2025-26 (31-03-2026) ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களால் சுமார் ஒன்பது லட்சம் பயிற்சியாளர்கள் பயிற்சி பெறுவார்கள். இந்த திட்டத்தின் கீழ் பொறியியல், கலை, அறிவியல் மற்றும் வர்த்தகப் பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்த பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ. 9,000 மற்றும் இந்தப் பிரிவுகளில் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ. 8,000 மாதம்தோறும் உதவித்தொகையாக அளிக்கப்படுகிறது.
திட்டத்தின் நோக்கம்
இந்த திட்டத்திற்குக் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒதுக்கிய தொகையை விட வரவிருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு 4.5 மடங்கு அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. தேசியக் கல்விக் கொள்கை – 2020 ஆனது தொழிற்பயிற்சிக்கு வழங்கியுள்ள உந்துதலின் காரணத்தால் தொழிற்பயிற்சிக்கான இந்த ஒதுக்கீடு அதிகரித்துள்ளது.