ஹைதராபாத்:மேற்கு வங்காளம், அசாம், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், தெலங்கானா, உள்ளிட்ட 14 மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
விரைவில் உத்தரபிரதேசம், உத்தராகண்ட், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இத்தேர்தல் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
மேற்கு வங்காளத்தில் நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. நான்கு தொகுதிகளிலும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதில் இரு இடங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி நகர்வை தொடங்கும் காங்கிரஸ்
பாஜக ஆளும் இமாச்சல பிரதேசத்தில் 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.
இமாச்சல பிரதேசம் மந்தி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மத்திய பிரதேசம் கந்த்வா மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றது.