ஹைதராபாத்: கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வரும் நிலையில், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மேகாலயா மற்றும் ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மக்களவை தொகுதி, உத்தரப்பிரதேசத்தின் சான்பே, சூயர், ஒடிசாவில் ஜார்சுகுடா மற்றும் மேகாலயாவின் சோஹியாங் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், இந்த ஆண்டு ஜனவரி 14 அன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடா யாத்ராவில் பங்கு பெற்றிருந்த காங்கிரஸ் எம்பி சங்கோத் சிங் மாரடைப்பால் காலமானார். இதனால் பஞ்சாப்பின் ஜலந்தர் மக்களவை தொகுதி காலியானது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள சூயர் தொகுதியில், மூத்த எஸ்பி தலைவர் அசாம் கானின் மகன் அப்துல்லா அசாம் கான் இருப்பதால் கவனிக்கத்தக்க தொகுதியாக இது அறியப்படுகிறது. அதேநேரம், கடந்த ஜனவரி 29 அன்று ஒடிசாவின் சட்டமன்ற உறுப்பினராகவும், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சராகவும் இருந்த நபா கிஷோர் தாஸ் கொல்லப்பட்டதால் அங்குள்ள ஜார்சுகுடா தொகுதி காலியானது.
அதேபோல், மேகாலயாவின் சோஹியாங் சட்டமன்ற தொகுதியின் யுடிபி (ஐக்கிய ஜனநாயக கட்சி) வேட்பாளர் ஹெச்டிஆர் லியாங்டோ உயிரிழந்ததால், பிப்ரவரி 27 அன்று நடக்க வேண்டிய தேர்தல் இங்கு மட்டும் ஒத்தி வைக்கப்பட்டது. இவ்வாறு காலியான தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 10ஆம் தேதி ஒரே கட்டமாக பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.