பெங்களூரில் தனியார் பேருந்து பனிமனையில் பற்றி எரிந்த தீ பெங்களூரு: வீரபத்ரா நகரில் உள்ள S.V.பேருந்து பணிமனையில் இன்று(அக்.30) பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 18 பேருந்துகள் தீயில் எரிந்த முற்றிலும் சேதமடைந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பானது. பேருந்துகளில் ஏற்பட்ட தீயினால் அப்பகுதி முழுவதும் கரும்புகையால் சூழ்ந்தது.
தொடர்ந்து இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் துணை இயக்குனர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். பல மணிநேர போராட்டத்திற்குப் பிறகு, தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்தச் சம்பவத்தில் 18 பேருந்துகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளன.
தீயில் சேதமடைந்த பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்துக்களே. பழைய பேருந்துக்களை பழுது பார்க்கும் போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த திடீர் தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பேருந்து பணிமனையில் ஏற்பட்ட மின்கசிவினால் தீப்பற்றி இருக்கலாம் என்றும் முதலில் பேருந்து குடோனில் தீ பற்றிய நிலையில், பின்னர் அது பேருந்துகளுக்கு பரவியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த பயங்கர தீ விபத்தில் நல்வாய்ப்பாக எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை. சம்பவம் நடைபெற்ற இடம் பொது வெளி என்பதனால், அங்கிருந்த பொதுமக்கள் வேகமாக வெளியேறியதாக தகவல் தெரிவித்துள்ளனர். பேருந்து பணிமனையில் பேருந்துகள் பற்றி எரியும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க:இஸ்ரேல் - ஹமாஸ் போர்: இஸ்ரேல் மக்களுக்கு எதிராக ரஷ்ய விமான நிலையம் முற்றுகை! 20 பேர் காயம்!