இந்தூர்:மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள கால்கட் நகரில் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 13 பேர் உயிரிழந்திருப்பதாக இந்தூர் ஆணையர் பவன் குமார் சர்மா உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இறந்தவர்களில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 பேர் பயணித்த அந்த பேருந்து, மத்திய பிரதேசத்தின் இந்தூரில் இருந்து மகாராஷ்டிராவின் புனே நகர் நோக்கி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், தவறான திசையில் இருந்த வந்த வாகனத்தில் மோதுவதை தவிர்ப்பதற்காக பேருந்தை திருப்பியபோது, பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றுப்பாலத்தில் பேருந்து கவிழந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் இரங்கல்:விபத்து குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,"மத்திய பிரதேச மாநிலம், தார் பகுதியில் நடந்த பேருந்து விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துகொள்கிறேன். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, இதுகுறித்து மத்திய பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா,"இந்தூரில் இருந்து புனே நோக்கி சென்றுகொண்டிருந்த மகாராஷ்டிர அரசு பேருந்து கால்கட் நகரில் விபத்துக்குள்ளானது. ஆக்ரா - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றுப்பாலத்தில் உடைத்துக்கொண்டு ஆற்றில் கவிழ்ந்துள்ளது" என தெரிவித்தார்.
இதுதொடர்பாக மகாராஷ்டிரா போக்குவரத்து துறை, "இன்று காலை மத்திய பிரதேசம் இந்தூர் நகரில் இருந்து மகாராஷ்டிராவின் ஜல்கானில் உள்ள அமல்னர் நகரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அமல்னர், விபத்து நடந்த தார் நகரில் இருந்து 260 கி.மீ தொலைவில் உள்ளது" என தெரிவித்துள்ளது.