பெங்களூரு : அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உடனான கூட்டத்தில் பேசிய பி.எஸ். எடியூரப்பா, “நான் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளேன். மதியம் 2 மணிக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டை (Thavar Chand Gehlot) சந்திக்கிறேன்” எனக் கூறினார்.
கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா மாநில முதலமைச்சராக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த விழா விதான் சவுதாவில் நடைபெற்றது.
எடியூரப்பா உருக்கம்
இதில் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா கலந்துகொண்டார். இந்த விழாவில் உணர்ச்சி பொங்க பேசிய எடியூரப்பா, “என் வேலையை நான் சிறப்பாக செய்தேன். இதில் நான் முழு திருப்தியை உணர்கிறேன். கட்சியின் வளர்ச்சிக்காகவும் கடுமையாக உழைத்தேன்.
ஆர்எஸ்எஸ் தொண்டராக தொடங்கி முதலமைச்சராக எனது பணியை நிறைவு செய்கிறேன். பூரா சபா சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வென்ற போது என் மீது மிருகத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது.
பட்டியலின மக்களுக்காக குரல்
என் வாழ்நாள் முழுக்க நான் மக்களுக்காக அர்ப்பணித்துள்ளேன். என் பணி தொடரும். ஜனசங்கத்திலிருந்து தொடர்கிறேன். விவசாயிகள் மற்றும் பட்டியலின மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என்றார். அப்போது அவரது நா தழுதழுத்தது. உணர்ச்சி பொங்க காணப்பட்டார்.
தொடர்ந்து கர்நாடக விவசாயிகள் பிரச்சினையில் சிறப்பாக செயல்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் பாராட்டினார் என்றும் கூறினார். பின்னர் அவர் கூறுகையில், “கட்சியில் 75 வயதை கடந்தவர்களுக்கு எந்தப் பணியும் கொடுக்கவில்லை.
எதிர்காலம்
ஆனால் எனக்கு 79 வயது வரை கட்சி மற்றும் ஆட்சியில் கௌரவம் வழங்கினார்கள். இது எனக்கான பணிக்காக கிடைத்தது. கட்சியை வலுப்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வருவதே எனது நோக்கம். நான் இன்னமும் அதே தீர்மானத்தில் உள்ளேன்.
ஜூலை 26 முதல் எனது கட்சிப் பணி மீண்டும் தொடரும். உங்களின் அன்பை ஒருபோதும் மறவேன். இதெல்லாம் ஆசிர்வாதத்தால் நிகழ்ந்தது. எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை மனதில் கொண்டு செயல்படுவேன். உங்களது ஆசிர்வாதங்கள் தேவை” எனத் தெரிவித்துள்ளார்.
ராஜினாமா
இதைத் தொடர்ந்து பி.எஸ். எடியூரப்பா விதான்சவுதாவில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். அவர் இன்று மதியம் 2 மணிக்கு தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டிடம் ஒப்படைத்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டது.
முன்னதாக எடியூரப்பா ராஜினாமா அளிக்கக் கூடாது என அவர் சார்ந்த லிங்காயத் தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர். தென் இந்தியாவின் முதல் பாஜக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : அடுத்த மூவ் என்ன? ஆளுநரை சந்திக்கிறார் எடியூரப்பா!