ஹைதராபாத்: 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மத்திய பாஜக அரசுக்கு எதிராக அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஈடுபட்டிருந்தார். அதன் ஒரு பகுதியாக தேசிய கட்சி தொடங்கவும் முடிவு செய்தார்.
அதன்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் தனது மாநில கட்சியான "தெலங்கானா ராஷ்டிர சமிதி"-ஐ தேசியக் கட்சியாக அறிவித்தார். அந்த தேசிய கட்சிக்கு "பாரத ராஷ்டிர சமிதி" எனப் பெயர் மாற்றம் செய்தார். பிஆர்எஸ் தேசிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அங்கீகாரம் அளித்தது.
இந்த நிலையில், வரும் 18ஆம் தேதி பாரத ராஷ்டிர சமிதியின் பொதுக்கூட்டத்தை நடத்த அக்கட்சியின் தலைவரும், தெலங்கானா முதலமைச்சருமான கே. சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார். இந்த பொதுக்கூட்டம், கம்மம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. மூன்று மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள கம்மம் மாவட்டத்தை, அரசியல் ரீதியாக முக்கியமான மாவட்டமாக கே.சந்திர சேகர ராவ் கருதுகிறார். அதன் காரணமாகவே அங்கு பொதுக்கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.