ஹைதராபாத்:மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (CISF) 54வது நிறுவன தினம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். இந்நிலையில் மத்திய அரசை விமர்சிக்கும் விதமாக, மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்பது போல் வித்தியாசமான பேனர்கள் ஆளும் பாரதிய ராஷ்ட்ர சமிதி கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்தன.
நிர்மா சலவைத்தூள் விளம்பரம் 1990களில் மிகவும் பிரபலம். இன்றும் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் இந்த விளம்பரம் ஒளிபரப்பப்படுகிறது. இந்த விளம்பரத்தில் வரும் சிறுமியின் முகத்துக்கு பதிலாக ஹிமந்தா பிஸ்வா சர்மா, நாராயண் ரானே, சுவேந்து அதிகாரி, சுஜானா சவுத்ரி, அர்ஜூன் கோத்கார், ஜோதிராதித்ய சிந்தியா, ஈஸ்வரப்பா, விருபக்சப்பா ஆகியோரின் படங்கள் வைக்கப்பட்டு பேனர் உருவாக்கப்பட்டிருந்தது. இவர்கள் அனைவரும் பல்வேறு ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்த நிலையில், பாஜகவுக்கு தாவினர்.
"கறைபடிந்த தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பாஜகவுக்கு சென்றால் தூய்மையாகி விடுவார்கள். அவர்கள் மீதான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்" என விமர்சித்து, பிஆர்எஸ் கட்சி சார்பில் இந்த பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பேசுபொருளாகியுள்ளன. இதேபோல் ஹைதராபாத்தில் ஒட்டப்பட்டிருக்கும் 'BYE BYE MODI' போஸ்டர்களும் கவனம் பெற்றுள்ளன.