புதுச்சேரி :உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்டு 1 முதல் 7ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடியில் உள்ள ராஜுவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இதில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு, தாய்ப்பால் விழிப்புணர்வு குறித்து சிறப்புரை ஆற்றினார்.
நடமாடும் தாய்ப்பால் வங்கி
விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டிருக்கிறது. அதற்கு என்னுடைய பாராட்டுக்கள். இரண்டு நாள்கள் கழித்து ஹைதராபாதில் நடமாடும் தாய்ப்பால் வங்கி தொடங்கி வைக்க இருக்கிறேன்.
கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கு, குறை மாதமாக பிறக்கின்ற குழந்தைகளுக்கு, பால் கொடுக்க முடியாத நிலையில் உள்ள தாய்மார்களுக்கு நடமாடும் தாய்ப்பால் வங்கி மிகுந்த பயனைத் தரும். ஆகவே நடமாடும் தாய்ப்பால் வங்கி தொடங்க வேண்டும் அதற்கான எல்லா உதவிகளையும் அரசு செய்யும்.
கரோனா சூழலில் அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் தாய்மார்கள், தயக்கமோ அச்சமோ இல்லாமல் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசிப் போட்டுக் கொண்ட பிறகு அவர்கள் பால் கொடுக்கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் மீண்டும் மீண்டும் எச்சரித்து வருகிறது. ஆகவே சூழலைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். புதிய பகுதிகளில் தொற்று அதிகம் காணப்பட்டால் அதனை உடனடியாக தெரிவிக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தெரிவிக்க வேண்டும். கரோனா அறிகுறிகளோடு அதிகம் பேர் அனுமதிக்கப்பட்டால் தெரிவிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்
தொடர்ந்து பேசிய அவர், “புதுச்சேரியில் கரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோய்கள் கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. பரிசோதனைகள் அதிகம் நடைபெறுவதால் தொற்று அதிகம் காணப்படுகிறது. ஆனாலும் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி இருக்கிறோம். அலுவலர்களும், மருத்துவர்களும் மிகவும் எச்சரிக்கையாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் மக்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. இரண்டாவது அலையில் மட்டுமல்லாமல் எதிர் காலத்திலும் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மருத்துவமனைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. பிராணவாயு படுக்கைகள், மருந்துகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு இருக்கிறது.
மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை
தடுப்பூசி மட்டுமே கரோனாவிலிருந்து நம்மைக் காக்கும் என்பதால் புதுச்சேரியில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடப்படுகிறது. இரவு நேரங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது என்பது மகிழ்ச்சியான தகவல். ஆனாலும் 100 விழுக்காடு அடைய வேண்டுமென்று முயற்சி செய்து வருகிறோம்.
மக்கள் கோரிக்கைகளை ஏற்று சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டன. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. மக்களைப் பாதுகாப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. புதுச்சேரி- தமிழ்நாடு மக்கள் என்ற பாகுபாடு இல்லாமல் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் 20 முதல் 25 விழுக்காடு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். காரைக்கால் பகுதியில் 40 விழுக்காடு பேர் சிகிச்சைப் பெறுகிறார்கள். மகப்பேறு சிகிச்சைப் பெறுபவர்களில் 60 விழுக்காடு பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டெல்டா வகை கரோனாவுக்கு எதிராக செயல்படும் கோவாக்சின் தடுப்பூசி