ஹைதராபாத்: மணிப்பூர் மாநிலத்தில் பொருளாதாரத்தில் முன்னேறிய மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க கூடாது என குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த மே மாதம் முதல் வன்முறை நடந்து வருகிறது. இரண்டு மாதங்களாக நடந்து வரும் இந்த வன்முறையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர குற்றத்தில் மூன்று பேர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, “மணிப்பூரில் நடந்த சம்பவம் இந்த சமூகத்திற்கே தலைகுணிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர குற்றச் செயலில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும்” என கூறினார்.
இந்த சம்பவத்திற்கு பாலிவுட் திரையுலகம் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. பாலிவுட் நட்சத்திரங்கள் அக்ஷய் குமார், ப்ரியங்கா சோப்ரா, கரீனா கபூர், ஏக்தா கபூர் உள்ளிட்ட பலர் தங்களது சமூக வலைதள பக்கம் மூலம் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கு: எதிர்மனுதாரர் 2 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை!