பெங்களூருவில் ஆகஸ்ட் 11ஆம் தேதி இரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்தியின் உறவினர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்தை கண்டித்து பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் எம்எல்ஏ வீடு சூறையாடப்பட்டது மட்டுமின்றி டி.ஜே., ஹள்ளி, கே.ஜி., ஹள்ளி காவல் நிலையங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்தக் கலவரத்தின்போது காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்தனர்.
இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களைக் காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். கலவரத்திற்கு காரணமான முக்கிய நபரை காவல் துறையினர் தேடிவந்த நிலையில், இவ்வழக்கின் விசாரணை சமீபத்தில் தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. இதையடுத்து, களத்திலிறங்கிய என்ஐஏ பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி ஏர்கன், கூர்மையான ஆயுதங்கள், இரும்பு தடிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
கலவரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறை சமர்ப்பித்த 400 பக்க அறிக்கையில், 60 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, முன்னாள் மேயர் சம்பத் ராஜ், முன்னாள் கார்ப்பரேட்டர் ஜாகிர் உசேன் ஆகியோரின் பெயர்கள் கலவரத்திற்கு முக்கியமான நபர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. விசாரணையில் இந்தக் கலவரம் எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்திக்கு எதிரான காங்கிரசின் அரசியல் விரோதமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.