ஹைதராபாத்:என்ஐடி, ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக ஜேஇஇ (JEE) நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஜேஇஇ மெயின்(Main) மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ்டு (Advanced) என இரு நிலைகளாக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்படும் இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், என்ஐடி, ஐஐடி போன்ற மத்திய தொழில் நுட்ப நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் படிப்பில் சேரலாம்.
இந்த தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும். அதன்படி, 2023ஆம் ஆண்டில் முதலாவதாக கடந்த ஜனவரி மாதம் ஜேஇஇ மெயின் தேர்வுகள் நடத்தப்பட்டன. அதில், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வை எழுதினர். ஒரு லட்சத்து 80 ஆயிரம் மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.
இதையடுத்து, நேற்று(ஜூன் 18) ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 43,773 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல், ஹைதராபாத் மண்டலத்திலிருந்து அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
தேசிய அளவில் முதல் பத்து இடங்களைப் பிடித்த மாணவர்களில் 6 பேர் ஹைதராபாத் மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். ஹைதராபாத் மண்டலத்தைச் சேர்ந்த வவிலாலா சித்விலாஸ் ரெட்டி என்ற மாணவர் 360க்கு 341 மதிப்பெண்கள் பெற்று, தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல் ஹைதராபாத் மண்டலத்தைச் சோ்ந்த ரமேஷ் சூா்யா தேஜா என்ற மாணவர் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.