தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேற்கு வங்க கள நிலவரத்தை ஆராய பாஜக மேலிடம் அமைத்த உயர்மட்ட குழு ! - டிஎம்சி நாடளுமன்ற உறுப்பினர் சௌகட ராய்

கொல்கத்தா : 2021ஆம் ஆண்டில் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கள நிலவரத்தை மதிப்பிட பாஜக மேலிடத்தால் அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட உயர்மட்ட குழுவினர் அம்மாநிலத்தின் மூத்த தலைவர்களுடன் இன்று (நவ.20) கலந்துரையாடினர்.

மேற்கு வங்க கள நிலவரத்தை ஆராய பாஜக மேலிடம் அமைத்த உயர்மட்ட குழு !
மேற்கு வங்க கள நிலவரத்தை ஆராய பாஜக மேலிடம் அமைத்த உயர்மட்ட குழு !

By

Published : Nov 20, 2020, 7:51 PM IST

மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசின் பதவிக்காலம் 2021ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைய உள்ளது. 294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட அம்மாநிலத்தின் தேர்தல், 2021ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள பாஜக, தற்போது மேற்கு வங்கத்தின் அதிகாரத்தை பிடிக்க தீவிர முனைப்புடன் செயலாற்றி வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 18 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை அகற்றி விட்டு ஆட்சிக் கட்டிலில் அமர செயல் திட்டங்களை வகுக்கத் தொடங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, மேற்கு வங்கத்தில் கள நிலவரத்தை மதிப்பிட உத்திகளை வகுக்க 11 பேர் கொண்ட குழுவை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இணைந்து அமைத்துள்ளனர்.

பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியாவை ஒருங்கிணைப்பாளராக கொண்டு அமைக்கப்பட்டுள்ள அந்த குழுவில் துஷ்யந்த் கவுதம், சுனில் தியோதர், வினோத் தவாடே, வினோத் சோங்கர், ஹர்திஸ் திவேதி, அமித் மாளவியா, மாநில தலைவர்கள் அமித் சக்ரவர்த்தி, கிஷோர் வர்மன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதே போல, மேற்கு வஙக மாநிலத்தை 5 மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு மேலிட தலைவரை துணைப் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவின் பலம், பலவீனம், மக்களிடையே உள்ள செல்வாக்கு உள்ளிட்ட கள நிலவரம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட இக்குழு, இன்று மண்டலத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் முதல்கட்ட கலந்துரையாடலில் ஈடுபட்டது. அந்த கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்ட செய்திகளை அறிக்கையாக தயார் செய்து, பாஜக மேலிடத்திற்கு அக்குழு அனுப்பும் என்று தெரிகிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டிஎம்சி நாடளுமன்ற உறுப்பினர் சௌகட ராய் கூறுகையில், "மேற்கு வங்கத்தில் திறன் வாய்ந்த தலைவர்கள் இல்லாத காரணத்தால் மாநிலத்தில் கட்சி நடவடிக்கைகளை கவனிக்க வெளியில் இருந்து தலைவர்களை இறக்குமதி செய்கிறது.

அவர்களுக்கு இங்கே ஒரு தலைவர் இல்லை என்பதை இந்த நடவடிக்கை நிரூபிக்கிறது. அதன் காரணமாக தான் அக்கட்சி மற்ற மாநிலங்களில் இருந்து தலைவர்களை அழைத்து வருகிறது. இதுபோன்ற பலத்துடன் அவர்கள் வங்காளத்தை கைப்பற்ற வேண்டும் என்று பகல் கனவு காண்கிறார்கள் என்பது நகைப்புக்குரியது" என கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details