புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு நேற்று பெரும்பான்மை இழந்ததையடுத்து ஆளுநர் தமிழிசையை சந்தித்து ராஜினாமா கடிதத்தை நாராயணசாமி அளித்தார். அடுத்து ஆட்சியமைக்க யாரும் உரிமை கோராத நிலையில், அடுத்தக்கட்டமாக புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வரக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, தொண்டர்கள் மத்தியில் பேசிய ஒரு காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், “நமச்சிவாயம் என்பது பாஜகவின் சுலோகம். ஏனெனில் எப்போதும் கடவுளை நினைப்பது, கோயிலுக்குப் போவது நம் நாட்டின் கலாச்சாரத்தோடு இருப்பது. அதுதான் பாஜகவின் கொள்கையும். அதேபோல் வரும் தேர்தலிலும், நமச்சிவாயத்தை முன்வைத்தே நாம் தேர்தலை சந்திப்போம்” என அண்மையில் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த நமச்சிவாயத்தை மனதில் வைத்து அவர் பேசினார். அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் அனைவரும் நமச்சிவாயம் வாழ்க என்று ஆரவார முழக்கமிட்டனர்.