புதுச்சேரி: பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "அனைத்து மாநில பாஜகவுக்கும் உத்வேகம் தரக்கூடியதாக புதுச்சேரி பாஜக மாறியிருக்கிறது. புதுச்சேரியில் பாஜக சார்பில் 6 எம்எல்ஏக்களுடன் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. அற்புதமான, வித்தியாசமான ஆட்சியை புதுச்சேரி மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு முன்பு இருந்த முதலமைச்சரால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை என்றால் மத்திய அரசின் மீதும், ஆளுநர் மீதும் பழிபோடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போது ஆரோக்கியமான முறையில் ஒரு ஆட்சி நடக்கிறது. அதற்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக முக்கியக் காரணம். இதே உத்வேகத்தில் தமிழ்நாட்டிலும் பாஜகவை வளர்க்கப் பாடுபடுவோம்.
புதுச்சேரி மக்களுக்கு பாராட்டு
புதுச்சேரியில் பாஜக ஆட்சிக்கு வராது. மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். தாமரை மலராது என்று கூறியதை இங்குள்ள தலைவர்கள் முறியடித்துள்ளனர். தற்போது 6 எம்எல்ஏக்கள், 3 நியமன எம்எல்ஏக்கள் என மொத்தம் 9 எம்எல்ஏக்களுடன் ஆட்சியைச் சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்காக மக்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன். உழைப்புக்கு மக்கள் வெகுமதி கொடுப்பார்கள் என்று புதுச்சேரி பாஜகவைப் பார்த்துக் கற்றுக் கொண்டுள்ளோம். வருகின்ற காலம் தமிழகத்தில் கூட அடி மேல் அடி எடுத்து வைத்து நிச்சயமாக ஆட்சியைப் பிடிப்போம்.