மேற்கு வங்க மாநிலம் பாசிம் பர்தமானில் குல்தியின் சங்க்டோரியா பகுதியில் பாஜக எம்எல்ஏ அஜய் பொட்டரால், கால்பந்து போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். மைதானத்தில் வரிசையாக நின்றுகொண்டிருந்த வீரர்களை சந்தித்த பாஜக எம்எல்ஏ அவர்களுடன் கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, மேடையிலிருந்த பாடகர்கள் சிலர் தேசிய கீதத்தைப் பாடத் தொடங்கினர். உடனடியாக, போட்டி நடுவர் விசில் ஊதி தேசிய கீதம் பாடுவதை நிறுத்தினார். இந்தக் காணொலி சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தேசிய கீதத்தைப் பாதியில் நிறுத்துவதா என கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில், இதுகுறித்து எம்எல்ஏ அஜய் பொட்டரால் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில், " எம்எல்ஏ வீரர்கள் இடையிலான சந்திப்பிற்கு பிறகே, வீரர்கள் வரிசையாக நின்றதும் தேசிய கீதம் பாட திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடைய நேரம் ஒதுக்குவதில் குழப்பம் ஏற்பட்டதால் இந்தத் தவறு நிகழ்ந்துள்ளது. இதற்கு அவர்கள் தான் முழு பொறுப்பு. பின்னர், நான் வீரர்களுடன் வரிசையாக நின்றதும், தேசிய கீதம் பாடப்பட்டது என்றார்.