பொன்முடியின் செயல் சரியில்லை - சீறிய குஷ்பு தூத்துக்குடி:கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு சென்றார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை குஷ்பூ கூறியதாவது, "தமிழகத்தில் தினமும் ஒரு பிரச்னை உள்ளது. முதலமைச்சர் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுவதுபோல் செயல்பட்டு, தமிழகத்தில் எதுவுமே நடக்கவில்லை.
ஈஷா யோகா மையத்தில் சுபஸ்ரீ உயிரிழந்தது தொடர்பாக, முறையாக விசாரணை நடத்த வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம், ஈஷாவுக்கு ஒரு சட்டம் நமக்கு என்று ஒரு சட்டம் என்று எதுவும் கிடையாது. முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்'' என்று தெரிவித்தார்.
மேலும், '' சட்டசபையை விட்டு ஆளுநர் வெளியேறும்போது அமைச்சர் பொன்முடி "போயா" என்று இழிவாகப் பேசி உள்ளார். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?'' என்று கூறிய நடிகை குஷ்பூ மற்றவர்களை தரக்குறைவாகவும் இழிவாகவும் பேசுவது தான் திராவிட மாடலா எனவும் கேள்வி எழுப்பினார்.
துணிவு, வாரிசு படம் பார்த்தீர்களா? என கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், ''துணிவு, வாரிசு இரண்டு படமும் பார்க்கவில்லை என்றும்; அதனால் எந்த கருத்தும் சொல்ல முடியாது'' என்றார். இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதாகவும், தமிழ்நாடு மட்டுமின்றி ஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோன்ற பிரச்னை இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த இளைஞர்கள் நலன் கருதியும், போதைப் பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுப்பது குறித்தும் மத்திய மற்றும் மாநில அரசுகள் என அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.
இதையும் படிங்க:"கவர்னரை தொட்ருவீங்களா?" - சவால் விடும் ஹெச்.ராஜா!