ஹைதராபாத்:2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அதன் பலத்தை காட்டுவதற்கு நடந்து முடிந்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஷ்கர், தெலங்கானா ஆகிய ஐந்து மாநில தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.
இந்நிலையில், மிசோரம் தவிர்த்து எஞ்சிய நான்கு மாநிலங்களில் இன்று (டிச.3) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 1 மணி நிலவரப்படி, சத்தீஷ்கரில் பாஜக 53 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 35 இடங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மத்திய பிரதேசத்தில் பாஜக 162 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 65 இடங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தானில் பாஜக 111 இடங்களிலும், காங்கிரஸ் 73 இடங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. தெலங்கானாவில் காங்கிரஸ் 62 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. இதனிடையே, தெலங்கானாவில் இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் 43 இடங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
முன்னதாக, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் மத்திய பிரதேசத்தை பாஜக தக்க வைத்துக் கொள்ளும் எனவும், ராஜஸ்தானில் காங்கிரஸை ஆட்சியில் இருந்து அகற்றி பாஜக ஆட்சியமைக்கும் எனவும் தகவல் வெளியானது. மேலும், தெலங்கானாவிலும், சத்தீஷ்கரிலும் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் எனக் கூறப்பட்டது.
இதையும் படிங்க:காங்கிரஸ் கட்சிக்கு ஷாக் கொடுத்த சத்தீஸ்கர் தேர்தல் முடிவு.. பாஜகவுக்கு வெற்றி முகம்.. கள நிலவரம் என்ன?
மத்திய பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் பாதிக்கு மேலான இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருவதால் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டதை போல, இந்த மாநிலங்களில் பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. அதேவேளையில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சத்தீஷ்கரிலும் பாஜகவின் 'கை'யே ஓங்கி உள்ளது.
மேலும், தெலங்கானாவில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் கட்சியை பின்னுக்குத் தள்ளி, காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. தெலங்கானாவில் பாஜக மூன்றாவது இடத்திலேயே உள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் நிலையில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, தொண்டர்கள் புடைசூழ சாலையில் மகிழ்ச்சியுடன் பேரணியாக சென்றார். மேலும், தொண்டர்களும் மேளதாளங்களுடன் இவ்வெற்றியை உற்சாகத்துடன் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க:மத்திய பிரதேசத்தில் மீண்டும் மலரும் 'தாமரை' - எந்த தொகுதியில் யார் யார் முன்னிலை.. முழு நிலவரம்!
இதேபோல மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் பாஜக தொண்டர்கள் கட்சி அலுவலகங்களில் பட்டாசுகள் வெடித்து, நடனமாடியும் கொண்டாட்டத்தை துவங்கி உள்ளனர். போபாலில் உள்ள கட்சி அலுவலகத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொண்டர்களுக்கு இனிப்புகளை பகிர்ந்து இம்மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறார்.
மேலும், மத்திய பிரதேசத்தில் பாஜக முன்னிலை வகித்து வரும் நிலையில், முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பிரதமர் மோடியின் தலைமையினால் இந்த வெற்றி கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் கையை மீறிச் சென்ற பாஜக..! தொடர்ந்து முன்னிலை வகிப்பதால் தொண்டர்கள் மகிழ்ச்சி!